தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே என்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பைரப்பன். விவசாயி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து உழவு செய்து வருகிறார். இவரது மகன் கோட்டை சிவன் (வயது17). இவர் நேற்று முன்தினம் மல்லஅள்ளி, ஜின்மானத்தம் ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களை உழவு செய்வதற்காக டிராக்டரில் சென்றுள்ளான். ஜின்மானத்தம் கிராமத்தில் சிவருத்ரப்பா என்பவருடைய விவசாய நிலத்தை சிறுவன் டிராக்டரில் உழுது கொண்டு இருந்தான். அப்போது நிலத்தில் உள்ள வரப்பு மீது டிராக்டர் ஏறியபோது திடீரென டிராக்டர் கவிழ்ந்தது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கி கோட்டை சிவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.