தமிழக செய்திகள்

திருப்பத்தூர் அருகே டிராக்டர் விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

கரடு முரடான நிலத்தில் டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநாயன குண்டா பகுதியை சேர்ந்த நல்லதம்பியின் மகன் மோனித் (வயது 12). தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். மோனித்தின் தாத்தாவுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், டிராக்டர் மூலம் நிலத்தை உழும் பணி நடைபெற்று வந்தது.

அப்போது டிராக்டரில் அமர வேண்டும் என சிறுவன் தனது தாத்தாவிடம் ஆசை தெரிவித்துள்ளார். பேரனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தாத்தா டிராக்டர் ஓட்டுநரிடம் கூறி சிறுவனை டிராக்டரில் அமர வைத்துள்ளார்.

விபத்து

இந்த நிலையில் கரடு முரடான நிலத்தில் டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை கவனிக்காமல் ஓட்டுநர் டிராக்டரை இயக்கியதில், சிறுவன் மீது டிராக்டர் ஏறி இறங்கியது. பலத்த காயமடைந்த சிறுவனை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேரனின் சிறிய ஆசையை நிறைவேற்ற நினைத்த தாத்தாவுக்கு பேரனை இழந்த சோகம். ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.