தமிழக செய்திகள்

குலசேகரப்பட்டினத்தில் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் பகுதியில் பள்ளி விடுமுறைக்கு வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் உதயசுதர்சன் (வயது 8). இந்த சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிபிறை தெருவில் உள்ள தனது தாத்தா முத்துச்சாமி மற்றும் பாட்டி லிங்ககனி(60) ஆகியோரின் வீட்டிற்கு வந்துள்ளான்.

இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில், சிறுவன் உதயசுதர்சன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விளையாடிய பந்து, அருகில் உள்ள சௌந்தரராஜன் என்பவரது வீட்டின் அருகே இருந்த ஒரு சிறிய சந்திற்குள் சென்றுள்ளது. அந்த சந்தில் ஏற்கனவே மின்கசிவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி சௌந்தரராஜன் அந்த சந்தை ஓலைகளை வைத்து மறைத்து வைத்துள்ளார்.

பந்தை எடுப்பதற்காக அந்த ஓலைகளை பிரித்துக்கொண்டு சிறுவன் உள்ளே சென்றபோது, அங்கு எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டான். சிறுவனின் வலது கை மற்றும் வலது நெஞ்சுப் பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால், மின்சாரம் தாக்கிய வேகத்தில் சிறுவன் உதயசுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு குறித்துத் தெரிந்திருந்தும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லையா அல்லது மின்சாரத் துறையின் அலட்சியமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறைக்கு வந்த இடத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT