தமிழக செய்திகள்

தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கடலில் 56 கி.மீ. நீந்தி சென்னை சிறுவன் சாதனை

56 கிலோமீட்டர் தூரத்தை 19 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்து சிறுவன் சாதனை படைத்துள்ளான்.

ராமேஸ்வரம்,

தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கடலில் 56 கி.மீ. நீந்தி சாதனைப் படைத்த சென்னையை சேர்ந்த சிறுவனுக்கு பாராட்டு குவிகிறது.

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருடைய மனைவி சர்மிளா, மகன் இஷான் (13 வயது). ஆட்டிசத்தால் பாதிப்படைந்த சிறுவன் இஷான் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் சென்று வரும் வகையில், நீந்தி சாதனை படைப்பதற்காக நேற்று முன்தினம் தனது பெற்றோருடன் ராமேஸ்வரம் வந்தான். தொடர்ந்து இஷான், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இருந்து இலங்கை தலைமன்னார் நோக்கி நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு நீந்த தொடங்கினான்.

அலைகளுக்கு நடுவே எதிர் நீச்சலிட்டு 6 மணி நேரத்தில் இரவு 10 மணிக்கு தலைமன்னார் சென்றடைந்தான். அரை மணி நேர ஓய்வுக்கு பின்னர் மீண்டும் தனுஷ்கோடி நோக்கி நீந்தி நேற்று தனுஷ்கோடி பகுதிக்கு வந்து சேர்ந்தான்.

சிறுவன் இஷானுக்கு துணையாக பிளாஸ்டிக் படகு மற்றும் பைபர் படகுகளில் நீச்சல் ஒருங்கிணைப்பு குழு மரிய ரோஜர் தலைமையில் 15-க்கும் மேற்பட்டோர் உடன் சென்றனர். தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி என மொத்தம் 56 கிலோமீட்டர் தூரத்தை 19 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்து சிறுவன் சாதனை படைத்துள்ளான். சிறுவன் இஷானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT