மதுரை,
மதுரை மாவட்டத்தில் ஒரு இளம்பெண்ணின் அந்தரங்க படங்களை வலைத்தளங்களில் பதிவிட்ட அப்பெண்ணின் காதலனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், விராலிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வாடிப்பட்டியில் உள்ள தனது தோட்டத்து வீட்டுக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் பாலியல் உறவு வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை மணிகண்டன் ரகசியமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்து இருந்தததாகவும் தெரிகிறது.
நாளடைவில் மணிகண்டனின் நடவடிக்கை பிடிக்காததால் சில மாதங்களுக்கு முன்பு அவருடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், அந்த இளம்பெண்ணுடன் எடுத்த அந்தரங்க படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.