தமிழக செய்திகள்

காலை உணவு திட்டம்: ஆசிரியர்கள் தரத்தை உறுதி செய்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு

சமையல் அறையில் செய்யும் பொருட்கள்தவிர, பிற பொருட்கள் வைப்பதை முழுமையாக தவிர்க்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பள்ளியில் வழங்கப்படும் காலை உணவின் தரத்தை, ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காமராஜர் காலை உணவுத் திட்டம்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்கிடையே த.வெ.க. அரசு இதை, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்தது. அதனுடன் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கும் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கடந்த 22-ம் தேதி விரிவாக்கம் செய்தார்.

இதன்மூலம் தற்போது தமிழகம் முழுவதுமுள்ள 44,984 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 34.64 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

சுற்றறிக்கை

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் காலை உணவு சாப்பிட்ட 40 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தொடக்கக் கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு வழங்கும் நேரத்தில் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் குறித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

சுழற்சி முறையில் கண்காணிப்பு

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* சமையல் அறையில் செய்யும் பொருட்கள் தவிர, பிற பொருட்கள் வைப்பதை முழுமையாக தவிர்க்கவேண்டும்.

* சமையல் அறை புகை, தூசி, நூலாம்படை இல்லாமல் தூய்மையாக எப்போதும் பராமரிக்கப்பட்டு வரவேண்டும்.

* சமையல் செய்யும் பாத்திரங்கள் மற்றும் பரிமாறும் பாத்திரங்களை பயன்படுத்துவதை முன்பும், பின்பும் நன்கு சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.

* சமைத்த உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்னர் அந்த உணவு அவர்களின் உடல்நலத்துக்கு உகந்த தரமான உணவுதான் என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.

* சமையல் செய்த பின்னர் பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் உணவு பொருட்களை முழுமையாக மூடி வைத்து தேவைப்படும்போது மட்டும் திறந்து மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.

* சமையல் செயும்போதும், சமைத்த பின்னர் பரிமாறுவதற்கு பிற பாத்திரங்களில் உணவை மாற்றிய பின்பும், மூடிவைத்த நிலையில் பாதுகாப்புடன் இருப்பதை ஆசிரியர்கள் உறுதிசெய்யவேண்டும்.

* மாணவர்களுக்கு உணவு பரிமாறுதல் பணியை தினமும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வரவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT