தமிழக செய்திகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்: உழவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது - அன்புமணி

த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகும் உழவர்கள் சுரண்டப்படுவது வருத்தமளிக்கிறது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவது தொடர்ந்து வருவதாகவும், உழவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதும், 2 கிலோ நெல் கூடுதலாக எடுத்துக் கொள்ளப்படுவதும் புதிய அரசிலும் தொடர்வதாக உழவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரும்பாடுபட்டு சாகுபடி செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் உழவர்கள் வேதனைப்பட்டு வரும் நிலையில், நெல்லை கொள்முதல் செய்வதற்கும் லஞ்சம் வசூலித்து அவர்களை சுரண்டி வருவது நியாயமற்றதாகும்.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ளது. அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் உழவர்கள் பல நாள்கள் காத்திருக்க வேண்டியிருப்பதுடன், 40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டைக்கு லஞ்சமாக ரூ.40 முதல் ரூ.60 வரை தர வேண்டியுள்ளது.

இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக 42 கிலோ வழங்க வேண்டும் என்றும் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கட்டாயப்படுத்தி எடுத்துக் கொள்கின்றனர். இதனால், ஒரு குவிண்டாலுக்கு ரூ.150 ரொக்கம், ரூ.125 மதிப்புள்ள நெல் என மொத்தம் ரூ.275 வீதம் உழவர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது. இந்த அநீதியை ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் உழவர்களிடமிருந்து நெல்லும், பணமும் சுரண்டப்பட்டன. அதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சிதான் முதன்முதலில் குரல் கொடுத்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் இது ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்தது. இன்றைய தமிழக முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் பரப்புரையின்போதும், அதற்கு முன்பாக பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் போதும், இதை சுட்டிக்காட்டி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உழவர்கள் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்துவோம் என உறுதியளித்தார். ஆனால், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகும் கூட உழவர்கள் சுரண்டப்படுவது தொடர்வது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் புதிய நெல் கொள்முதல் பருவம் அக்டோபர் ஒன்றாம் தேதி தான் தொடங்கும். அதையொட்டி தான் புதிய நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்கும். அதனால், இப்போது வரை கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட குவிண்டாலுக்கு ரூ.2500 என்ற விலையில் தான் நெல் கொள்முதல் செய்யப் படுகிறது. இதில் தமிழ்நாடு அரசின் பங்காக ரூ.131 மட்டும் தான் வழங்கப்படுகிறது. ஆனால், அதைவிட இரு மடங்குக்கும் கூடுதலாக ரூ.275 மதிப்புள்ள பணத்தையும், நெல்லையும் உழவர்களிடமிருந்து நெல் கொள்முதல் நிலையங்கள் சுரண்டுவதை அனுமதிக்க முடியாது. இந்த அநீதி தொடர்வதை அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

காவிரி பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை கையூட்டு வசூலிக்கப்படுவதை அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சில நாள்களுக்கு முன் ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள், கொள்முதல் நிலையங்களில் கையூட்டு வசூலிக்கப்படுவதை ஒப்புக்கொண்டதுடன், இதை நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்து பார்க்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.

நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அது அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து அரசு தவறியதற்காக உழவர்கள் சுரண்டப்படுவதையும், அதை அரசு கண்டும் காணாமல் இருப்பதையும் பொறுப்புள்ள அரசியல் கட்சிகளால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கொள்முதல் நிலைய செலவுகளை பணியாளர்களே பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதே போல், நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல. இதனால்தான் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்தக் குறைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.

அரசு நிர்வாகத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் நடைமுறை சிக்கல்கள் காலம் காலமாக புரையோடிக் கிடக்கின்றன. நெல் கொள்முதல் கட்டமைப்பிலும் அவை ஊடுருவியுள்ளன. அவற்றால் உழவர்கள் பாதிக்கப்படுவதையும், சுரண்டப்படுவதையும் அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அனைத்து நடைமுறை சிக்கல்களையும் அரசு உடனடியாக சரி செய்து கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 கையூட்டு வசூலிக்கப்படுவதையும், கூடுதலாக நெல் எடுக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.