தமிழக செய்திகள்

லஞ்சம் பெற்ற வழக்கு: அன்பில் மகேசை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

அன்பில் மகேசை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரியிருந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 26-ந்தேதி அன்று அதிரடியாக கைது செய்தனர்.

போலீசார் மனு தாக்கல்

அவர், வருகிற 6-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு 2-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து இருந்தது.

துன்புறுத்தக் கூடாது..

அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை இன்று மதியம் 1 மணி முதல் 4-ந்தேதி மாலை வரை போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணைக்கு முன்னதாக அன்பில் மகேசுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவரை போலீசார் உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவல் துறை விசாரணையின்போது வழக்கறிஞர் உடன் இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், விசாரணை முடிந்து, 5-ந்தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT