சென்னை,
விசாரணையின்போது, அன்பில் மகேஷிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு ஒன்றை நேற்று இரவு வெளியிட்டனர்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவர் மீதான வழக்கு தொடர்பாக நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அவரிடம் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது. விசாரணையில் பல்வேறு கேள்விகளை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 7 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையின்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு ஒன்றை நேற்று இரவு வெளியிட்டனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்பு சட்டபிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில்தான், அவர் மீது இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய அரசகுமார், முத்துக்குமார் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் உடனான தொடர்புகள், பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் கட்சி நிதி வசூல் தொடர்பான விவரங்கள், அதோடு தொடர்புடையதாக கண்டறியப்பட்ட வங்கிக்கணக்குகள், பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
குற்றம் சார்ந்த நிகழ்வுகள் வாரியாகவும், ஆவணங்கள் ஆதார அடிப்படையிலும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அவருடைய பதில்கள் மற்றும் விளக்கங்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.