தக்கலை,
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஈத்தவிளையை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ் (வயது 43), கொத்தனார். இவருக்கும், குலசேகரம் அருகே உள்ள ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த ஜெர்லின் பிரேமா (35) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது 4.5 வயதில் ஒரு மகன் உண்டு.
வின்சென்ட் ராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும், அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஜெர்லின் பிரேமா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகனை கூட்டிக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். அத்துடன் பத்மநாபபுரம் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று காலை ஜெர்லின் பிரேமா தனது தம்பி ஜெரினுடன் கோர்ட்டுக்கு புறப்பட்டு வந்தார்.
அப்போது வின்சென்ட் ராஜ் தகராறு செய்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய வின்சென்ட் ராஜை வக்கீல்களும், பொதுமக்களும் சிறிது தூரம் துரத்தி சென்று பேலஸ் ரோட்டில் வைத்து மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவருக்கு தர்ம அடி கொடுத்து தக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, வின்சென்ட் ராஜை கைது செய்தனர். இதற்கிடையே அரிவாளால் வெட்டில் படுகாயம் அடைந்த ஜெர்லின் பிரேமா சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார்.