தமிழக செய்திகள்

விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே கட்டப்படும் பாலம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

பாலப்பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் எஸ். சமீரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்தில் விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே கட்டப்படும் பாலப்பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ஜி. எஸ். சமீரன் இன்று (18.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ரூ.2.25 கோடியில் புதிய பாலம்

விருகம்பாக்கம் கால்வாயில் தூர்வாருதல், தடுப்புச்சுவரினை உயர்த்திக் கட்டுதல், கால்வாயின் இருபுறங்களிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளை இணைக்கும் விதமாக 6 புதிய பாலங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே தமிழர் வீதியில் ரூ.4.98 கோடி மதிப்பீட்டிலும், இந்திரா காந்தி 2வது தெருவில் ரூ.2.32 கோடி மதிப்பீட்டிலும் 2 புதிய பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே கண்ணகி தெருவில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கோ.சு.மணி சாலை மற்றும் திருக்குமரபுரம் ஆகிய பகுதிகளில் ஒப்பந்தங்கள் முடிவுற்று பணிகள் துவக்க நிலையில் உள்ளன. இதுதவிர, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் 100 அடி சாலைப் பகுதியில் புதிய பாலம் ஒன்றும் கட்டப்படவுள்ளது.

ஆணையர் ஆய்வு

மாநகராட்சி ஆணையர் விருகம்பாக்கம் கால்வாயில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ள தமிழர் வீதி மற்றும் இந்திரா காந்தி 2வது தெரு பாலங்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் கண்ணகி தெரு பாலம் மற்றும் கோ.சு.மணி சாலை மற்றும் திருக்குமரபுரத்தில் புதிதாக தொடங்கப்படும் பாலப்பணிகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஆணையாளர் புதிய பாலப் பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி மேற்கொண்டு விரைந்து முடித்திடவும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கட்டப்படவுள்ள பாலப்பணியினை உடனடியாக தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விருகம்பாக்கம் கால்வாயில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் தூர்வாருதல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, தலைமைப் பொறியாளர் (பாலங்கள்) பி.சங்கரவேலு, மண்டல அலுவலர் எஸ்.இனியன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.