தமிழக செய்திகள்

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் பழுது: நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் வைப்பாற்றுப் பாலத்தில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு இதுவரை 17 முறை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த முத்துலாபுரம் பாலத்தை முழுமையாக அப்புறப்படுத்தி, புதிய பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முத்துலாபுரம் உயர்மட்ட பாலம்

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், எட்டையபுரம் தாலுகா, முத்துலாபுரம் பகுதியில் வைப்பாற்றின் குறுக்கே கடந்த 2009-ம் ஆண்டு உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் உள்பட தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இ்ந்த பாலத்தின் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

வாகன விபத்துகள்

இந்த நிலையில் பாலத்தின் ஒரு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வைப்பாற்றின் குறுக்கே முத்துலாபுரம் பகுதியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் பயன்பாட்டுக்கு வந்தது முதல் இதுவரை பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

விபத்துகளால் உயிரிழப்பு

அந்த பாலத்தில் 15 மீட்டருக்கு ஒருமுறை இரும்பு ராடு கான்கிரீட் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரும்பு அடிக்கடி உடைந்து, கான்கிரீட் பெயர்ந்து பள்ளம் ஏற்படுவதால், விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் கடுமையான அதிர்வு ஏற்படுவதால் அதன் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதுவரை இந்த பாலம் 17 முறை விரிசல் ஏற்பட்டுச் சேதமடைந்துள்ளது.

நிரந்தர தீர்வு காண கோரிக்கை

சேதமடைந்த முத்துலாபுரம் பாலத்தை முழுமையாக அப்புறப்படுத்தி, பயணிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில் புதிய பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல மு.கோட்டூர் விலக்கிலும் புதிய உயர்மட்ட பாலம் ஒன்றினை விரைவில் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

SCROLL FOR NEXT