தமிழக செய்திகள்

என்ஜின் பழுதால் 2 மணி நேரம் நடுவழியில் நின்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில்

என்ஜின் பழுது காரணமாக சுமார் 2 மணி நேரம் நடுவழியில் ரெயில் நின்றதால், அதில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு நோக்கி இன்று காலை 7.40 மணிக்கு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு - மோசூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே காலை 8.25 மணியளவில் சென்றபோது, திடீரென ரெயிலின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, திருவாலங்காடு யார்டு சிக்னலை கடந்து ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் அரக்கோணம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ரெயில்வே ஊழியர்கள் மாற்று என்ஜினை பொருத்தி பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை காலை 10.57 மணிக்கு அரக்கோணத்துக்கு கொண்டு சென்றனர்.அங்கு புதிய என்ஜின் பொருத்தப்பட்ட பின்னர், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மீண்டும் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

என்ஜின் பழுது காரணமாக சுமார் 2 மணி நேரம் நடுவழியில் ரெயில் நின்றதால், அதில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும், ரெயில் சிக்னலை கடந்து நின்றதால், 1 மற்றும் 2-வது தண்டவாளங்கள் வழியாக சென்னை - அரக்கோணம் வரை இயக்கப்படும் 4 புறநகர் ரெயில்களும் தாமதமாக சென்றன