தமிழக செய்திகள்

மதுபோதையில் தகராறு: அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி இருவரும் தங்களது வீட்டின் முன்பு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் தகராறு

தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன்கள் இசக்கிமுத்து (வயது 23) மற்றும் வள்ளிகணேசன்(21). அண்ணன், தம்பிகளான இருவரும் நேற்று இரவு தங்களது வீட்டின் முன்பு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது போதையில் இருந்த இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தம்பி வள்ளிகணேசன், அங்கிருந்த அரிவாளை எடுத்து அண்ணன் இசக்கிமுத்துவை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் இசக்கிமுத்துவின் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

கைது

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, வள்ளிகணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT