சண்டிகர்,
அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மனோஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம்(வயது 55). சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான சீதாராமை, பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள போலியோ சிகிச்சை மையத்தில், 35 ஆண்டுகளுக்கு முன் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர்.
ஒரு மாதத்துக்கு பின் அவரை பார்க்க சென்றபோது, சீதாராம், அங்கிருந்து வெளியேறியிருந்தார். பல ஆண்டுகளாக தேடியும் சீதாராம் கிடைக்கவில்லை. இதற்கிடையே, பஞ்சாபின் அமிர்தசரசில் அரசு பணியில் சேர்ந்த அவர் அங்கேயே வசித்து வந்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மற்றும் அரியானாவில் எஸ்.ஐ.ஆர். பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, தனது படிப்பு சான்றிதழ் தேவைப்பட்டதால், மனோகர்பூரில் தான் படித்த பள்ளிக்கு சீதாராம் சென்றார். அங்கு பணியில் இருந்த உதவி வாக்காளர் பதிவு அதிகாரி ரமேஷ் குமாரிடம், தன் மூத்த சகோதரர் பல்பீர் மனோகர்பூரில் வசித்தார் என்று சீதாராம் கூறியுள்ளார்.
இது குறித்து மனோகர்பூரைச் சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் கிருஷன் குமாரிடம் ரமேஷ் குமார் விசாரித்தார். கிருஷனுக்கு பல்பீரை ஏற்கனவே தெரிந்திருந்ததால், சீதாராம் வந்திருப்பது குறித்து பல்பீரிடம் அவர் தெரியப்படுத்தினார். மாயமான தன் சகோதரர், பள்ளிக்கு வந்திருப்பதை அறிந்த பல்பீர் உடனடியாக அங்கு சென்றார். 35 ஆண்டுகளுக்கு பின் தம்பியை சந்தித்த பல்பீர், கண்ணீருடன் அவரை ஆரத்தழுவிக் கொண்டார். நீண்ட காலத்திற்கு முன்பு குடும்பத்தை பிரிந்த சீதாராம், எஸ்.ஐ.ஆர். பணி மூலம் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.