திருச்சி,
கம்பியால் குத்தியதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை கணவன் குத்திக்கொலை செய்தார்.
திருச்சி தீரன்நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் என்ற மூர்த்தி (வயது 40). இவரது மனைவி கவிதா (36). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பத்குமார் மிளகுபாறை பகுதியில் உள்ள ஒரு பீடா கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தினமும் கவிதா மதிய நேரத்தில் சாப்பாடு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து கவிதா சாப்பாடு கொண்டு செல்லவில்லை. இதுகுறித்து சம்பத்குமாருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சம்பத்குமார் நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்து வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் மேலும் கோபம் அடைந்த அவர் கதவை உதைத்து திறந்து உள்ளே சென்றார். அங்கு வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் கவிதாவின் உடலில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அவர், தனது மாமியாரை செல்போனில் தொடர்பு கொண்டு, கவிதாவை குத்தி விட்டேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கவிதாவின் தாய், கவிதா வீட்டுக்கு விரைந்து சென்றார்.
அங்கு காயத்துடன் கிடந்த கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். கவிதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த சம்பத்குமார் நேற்று முன்தினம் இரவு அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது அங்கு சிகிச்சையில் இருந்த கவிதாவிடம், 'நீ இன்னும் சாகவில்லையா, உயிரோடு தான் இருக்கிறாயா?' என்று ஆவேசமாக பேசிய சம்பத்குமார், பஞ்சர் ஒட்டுவதற்கு பயன்படுத்தும் குத்தூசியால் மீண்டும் கவிதாவின் வயிறு உள்பட பல இடங்களில் மாறி மாறி குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் கவிதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாக உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.