தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கொடூரம்: குடிபோதை தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை

தூத்துக்குடியில் கச்சேரி தளவாய்புரம் கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஒருவர், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்தும்போது தகராறு

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமம், மேற்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மலைராஜ் (வயது 30). திருமணம் ஆகாத இவர், டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு மலைராஜ், கச்சேரி தளவாய்புரம் கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது.

தொழிலாளி வெட்டிக்கொலை

அந்த தகராறின்போது ஆத்திரமடைந்த 3 பேரும், தங்களிடம் இருந்த அரிவாளால் மலைராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மலைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளிகள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதற்கிடையே, இரவில் வீட்டிற்கு வராத மகனைத் தேடி இன்று காலை தந்தை மாரியப்பன் சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் மலைராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். உடனடியாக இதுகுறித்து ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், மலைராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஒட்டப்பிடாரம் போலீசார், தப்பி ஓடிய 3 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.