சென்னை,
தமிழ்நாட்டைச் சேர்ந்த புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் என மொத்தம் 120 நபர்கள் அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
புனித தலங்கள் விவரம்
பீகாரில் உள்ள புத்தகயா, ராஜ்கிர், வைஷாலி, உத்தரபிரதேசத்தில் உள்ள குசிநகர், வாரணாசியில் உள்ள சாரநாத் கோவில், நேபாளத்தில் உள்ள லும்பினி.
ராஜஸ்தானில் உள்ள தில்வாரா, ரணக்பூர், ஜெய்சால்மர் சமண கோவில்கள், ஜார்க்கண்டில் உள்ள சிக்கர்ஜி, குஜராத்தில் உள்ள பாலிடனா, பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில், கர்நாடகாவில் உள்ள சரவணபெலகோலா.
பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீ கேசகர் சாகிப், தக்ட் ஸ்ரீ டாம்டமா சாகிப், பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப், மராட்டியத்தில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், ஸ்ரீ சச்சா சௌதா (மண்டி சுகர்கானா), ஸ்ரீ பஞ்ச சாகிப் (ஹசன் அப்தல்), ஸ்ரீ தெஹ்ரா சாகிப்.
இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் புனித பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் "ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005" என்ற முகவரிக்கு வருகிற 31.01.2027-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.