சென்னை,
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் முழுவதும் மத்திய அரசை விமர்சனம் செய்தும், வீண்பழி சுமத்தும் வகையிலும் உள்ளது. மேலும் தி.மு.க. ஆட்சி யின் சாதனைகள் என்ற பெயரில் தற்புகழ்ச்சியாக உள்ளது. முஸ்லிம்கள், கிறிஸ்தவ மக்களின் ஒட்டுகளை பெற ஏராளமான சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்துக்களின் முன்னேற்றத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தி.மு.க. அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக கடன் சுமை ரூ.10% லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. டாஸ்மாக் வருமானம், உலக வங்கி மற்றும் வெளிநாடுகளில் கடன் வாங்கி உற்பத்தி, மூலதனம், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலீடு செய்யாமல் கவர்ச்சி இலவச திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்து வருகிறார்கள்.
புதிய கோவில்கள் கட்ட, பாழடைந்த கோவில்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கவில்லை. 8,500 கோவில்களில் கும்பாபிஷேம் நடத்தியதாக கூறுகிறார்கள். ஆனால் கும்பாபிஷேகம் நடத்த ஒரு பைசா கூட தமிழக அரசு செலவு செய்யவில்லை. பக்தர்களின் நன்கொடை மற்றும் உபயதாரர்கள் மூலமாகவே கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழக அரசின் இடைக் கால பட்ஜெட்டுக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.