சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டி தண்ணீரைத் தேக்கி பாசன பரப்பை மேலும் விரிவுபடுத்தி பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் வரையப்பட்ட, கர்நாடக மாநிலத்தின் ரூ.5 ஆயிரத்து 912 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த அனுமதி தமிழகத்தின் குடிநீர் தேவையையும், வேளாண் நடவடிக்கைகளையும் பெருமளவுக்கு பாதிக்கும் என்பதால் தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அணை திட்டம், தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் புதிய அணை கட்டக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு முற்றிலும் விரோதமானது.
மத்திய அரசு புதிய அணை கட்ட அனுமதி அளித்திருப்பது தமிழகத்தின் அடிவயிற்றில் எட்டி உதைத்திடும் அடாவடித்தனமான செயலாகும்.
மத்திய அரசின் இந்த தமிழக விரோதப்போக்கு, 7 கோடி தமிழக மக்களையும் எரிமலையாக குமுற வைத்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க. அரசோ விருதுகள் வாங்குவதிலும், விழாக்கள் கொண்டாடுவதிலும் ஈடுபட்டு, தமிழக உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய அரசிடமும், அண்டை மாநிலங்களிடமும் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறது. காவிரி இறுதி தீர்ப்பின்படி பல் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க துணை நின்றது அ.தி.மு.க. அரசு.
சுப்ரீம் கோர்ட்டு கெடுபிடிக்கு பிறகும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்திற்கு பிறகும் அவற்றை அலட்சியப்படுத்தி உருவாக்கப்பட்ட அதிகாரமில்லாத காவிரி இறுதி தீர்ப்பு வரைவுத்திட்டத்தை தங்களின் வாழ்நாள் சாதனை போல் நினைத்து மகிழ்ச்சி விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டது தமிழக அரசு.
தமிழகத்தின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்ற எடப்பாடி பழனிசாமியின் பேச்சு முடிவதற்குள், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் முதுகில் ஓங்கி ஈவு, இரக்கமின்றி குத்தியிருக்கிறது மத்திய அரசு. ஆகவே தமிழகத்தின் நெருக்கடியை ஒரு கணம் நினைத்துப்பார்த்து, மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட வரைவு அறிக்கைக்கு கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு, மறு சிந்தனைக்கு இடம் கொடுக்காமல், உடனே திரும்பப்பெற வேண்டும்.
2 மாநில நல்லுறவு மற்றும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி, இந்த திட்டத்தை பிடிவாதமாக தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதை கர்நாடக மாநில அரசு கைவிட்டுவிடவேண்டும் என்றும்; தமிழக அரசின் சார்பில் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி மத்திய அரசின் அனுமதிக்கும், கர்நாடக மாநில அரசு புதிய அணை கட்டும் விவசாயிகள் நேயமற்ற திட்டத்துக்கும், தாமதிக்காமல் தடையாணை பெற வேண்டும். தவறினால் காவிரி நதிநீர் வரலாற்றில் கருப்பு அத்தியாயம் ஒன்றை உருவாக்கியதற்கு, அ.தி.மு.க. அரசு முழு பொறுப்பேற்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் தலைவர்கள் கூறியிருப்பதாவது:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- மத்திய அரசு ஒப்புதல் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்ள முடியும். தமிழக நலனுக்கு எதிரான இந்த அனுமதி கண்டிக்கத்தக்கது.
கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டி.எம்.சி. ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டி.எம்.சி. கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டி.எம்.சி.யாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கிவைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி பாசன மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகிவிடும்.
எனவே, மேகதாது அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இந்த விஷயத்தில் அரசு முடிவு எடுக்கும் வரை காத்திராமல் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
கர்நாடக அரசின் வீண்பிடிவாதப் போக்குக்கு மத்திய அரசு ஆதரவளிப்பது நியாயமற்றது. ஏற்புடையதல்ல. அதாவது மத்திய அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு தொடர வேண்டும் என்றால் மத்திய அரசானது அனைத்து மாநிலத்துக்கும் நியாயமாக, நடுநிலையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்துக்கு எதிராகவும் செயல்படுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-
மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-
மேகதாதுவில் புதிய அணை கட்டும்பட்சத்தில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது முழுமையாக நின்றுவிடும். இதனால், தமிழகத்தின் விவசாயம் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும்.
தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கிற விதமாக மத்திய அரசு நடந்துகொள்வது துரதிர்ஷ்டவசமானது. நீதிமன்றங்களின் தீர்ப்பை மதித்து மத்திய அரசு கர்நாடகத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை திரும்பப்பெற வேண்டும்.