சென்னை,
வணிக தள்ளுபடி விகித கட்டண முடிவை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் யு.பி.ஐ. பரிவர்த்தனை கட்டணம் மீதான வணிக தள்ளுபடி விகிதம் வாடிக்கையாளர்களை பாதிக்காது, வியாபாரிகள் ஏற்று கொள்வார்கள், இது அரசின் வரியல்ல என்று கூறி மிக சாதாரணமாக கடந்து செல்ல பார்க்கிறார். ஆனால், உண்மை என்னவென்றால் இத்தகைய சப்பைக்கட்டுகள் உண்மை நிலவரத்தை முற்றிலும் மூடி மறைக்கும் செயல் என்பதை வணிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 4.5 லட்சம் விநியோகஸ்தர்கள் மற்றும் 1.3 கோடி சிறு சில்லரை வணிகர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு பரிவர்த்தனை கட்டணத்திற்கு வணிக தள்ளுபடி விகித கட்டணம் விதிப்பதால் வேகமாக விற்கப்படும் நுகர்வோர் பொருட்களின் விநியோகத்துறைக்கு ஆண்டுக்கு ரூபாய் 7000 முதல் 9000 கோடி வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
நுகர்வோர் மற்றும் சில்லறை வர்த்தகம் என இருமுனைகளிலும் இரட்டை சுமையாக விழும் இந்த கட்டணத்தை 3.5 முதல் 6 சதவிகித குறைந்த லாப வரம்பில் இயங்கும் வணிகர்கள் எவ்வாறு ஏற்க முடியும் ? அதிகபட்ச சில்லரை விலை கட்டமைப்பினால் இந்த கூடுதல் செலவை நுகர்வோர் மீது சுமத்தவும் முடியாது. அதே சமயம் விநியோகஸ்தர்களும், சில்லரை வியாபாரிகளும் தாங்களாகவே உள்வாங்கிக் கொள்ள முடியாது என்பதே யதார்த்த கள நிலவரமாகும்.
எளிய வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தில் இது அரசின் வரியல்ல, இந்திய தேசிய செலுத்துதல் கழகம் மற்றும் வங்கிகளின் முடிவு என்று மத்திய அரசு தன் பொறுப்பை தட்டிக் கழிப்பது எவ்விதத்திலும் நியாயமல்ல.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் முதுகெலும்பாக விளங்கும் சிறு வணிகர்களை நசுக்கும் இந்த வணிக தள்ளுபடி விகித கட்டண முடிவை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதை ரத்து செய்யவில்லை என்றால் கோடிக்கணக்கான நுகர்வோர்களும், வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.