தமிழக செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் மந்தம்: கரும்பு கட்டுகளை சாலையோரம் வீசிச்சென்ற வியாபாரிகள்

சென்னையில் கரும்புகளை விற்பனை செய்ய தனி மார்க்கெட் அல்லது முறையான இடத்தை ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு வியாபாரம் மந்தமாக நடந்ததால் கரும்பு கட்டுகளை சாலையோரம் வியாபாரிகள் வீசி சென்றனர். அவற்றை பொதுமக்கள் கட்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர்.

கரும்பு விற்பனை

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள், மலர்கள் மற்றும் பழங்கள் விற்பனை களைகட்டியது. அவற்றை பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் அதிகளவில் வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் கரும்பு முக்கியப்பங்கு வகிப்பதால், கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து டன் கணக்கில் கரும்புகள் லாரிகள் மூலம் கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் கரும்புகளை வாங்குவதற்கு சில்லறை வியாபாரிகளோ, பொதுமக்களோ எதிர்பார்த்த அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை.

கரும்பு கட்டுகளை சாலையோரம் வீசிச்சென்ற வியாபாரிகள்

இதனால் கரும்பு விற்பனை போதிய அளவில் நடைபெறவில்லை. இதனால் 30 லாரிகளில் கொண்டுவரப்பட்ட கரும்பு கட்டுகள் அனைத்தும் வீணாயின. கரும்பு வெட்டும் கூலி, லாரி வாடகை கொடுத்து கொண்டுவரப்பட்ட கரும்புகள், விற்பனை ஆகாததாலும், வாங்கிய முதலை கூட எடுக்க முடியாததாலும் விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை அடைந்தனர். கரும்புகளை மீண்டும் சொந்த ஊருக்கு ஏற்றிச் செல்ல போக்குவரத்து செலவு கூடுதல் சுமையாகும் என்பதால், வேறு வழியின்றி கோயம்பேடு பகுதியில் சாலையோரங்களிலேயே கரும்பு கட்டுகளை வீசி விட்டு வியாபாரிகள் கவலையுடன் வீடு திரும்பினர். சாலையோரம் வீசப்பட்ட கரும்பு கட்டுகளை அப்பகுதி மக்கள் கட்டுகட்டாக வீடுகளுக்கு தூக்கிச் சென்றனர். மாடுகளுக்கும் அந்த கரும்பு இரையானது.

வியாபாரிகள் வேதனை

இதுகுறித்து, கரும்பு வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:

கோயம்பேடு மார்க்கெட்டில் இந்த ஆண்டு விற்பனைக்காக ஒதுக்கப்பட்ட புதிய இடத்தில், உள்ளே வருவதற்கு மட்டுமே வழி உள்ளது. வெளியே செல்வதற்கு வழி இல்லை. இதனால் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புதிய இடத்துக்குள் வந்து கரும்புகளை வாங்க அதிக அளவில் வரவில்லை. இதனால் போட்ட முதலீட்டை கூட எடுக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. லாரி வாடகை கொடுக்கும் அளவுக்கு கூட விற்பனை நடைபெறவில்லை. 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதும் விற்பனை பாதிப்புக்கு காரணமாக அமைந்தது. எனவே, கரும்பு வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்புகளை விற்பனை செய்ய தனி மார்க்கெட் அல்லது முறையான இடத்தை ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT