தமிழக செய்திகள்

நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: கைதிகள் 8 பேர் அதிரடி கைது

நாகர்கோவில் சிறையில் கடந்த 13-ந்தேதி காலை, வியாபாரி சபரிவர்மன் சிறையில் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சிறையில் வியாபாரி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதிகள் 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நாகர்கோவில் சிறையில் வியாபாரி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 33). மாற்றுத்திறனாளியான அவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த கடையில் கடந்த 9-ந்தேதி தென்தாமரைகுளம் போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையில் 3-வது முறையாக சபரிவர்மன் சிக்கியதால், அவரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி காலை, சபரிவர்மன் சிறையில் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீசார் மீது குற்றச்சாட்டு

சபரிவர்மன் இறந்த தகவல் அறிந்து அவரது மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துமனையில் திரண்டனர். அவர்கள் சபரிவர்மன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை போலீசார் அடித்துக்கொன்று விட்டதாகவும் குற்றம்சாட்டினர். அவரது சாவுக்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சபரிவர்மனின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

சிறையில் அடித்துக்கொலை

இதற்கிடையில் சபரிவர்மன் இறந்தது குறித்து நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சத்தியமூர்த்தி விசாரித்தார். பின்னர் நாகர்கோவில் சிறைக்கு சென்று சிறைக்காவலர்கள் மற்றும் மற்ற கைதிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். அது மட்டுமின்றி கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினும் நாகர்கோவில் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினார்.

சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள்

இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சிறைக்குள் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, நாகர்கோவில் சிறையின் முதன்மை வார்டரான நெல்லை மாவட்டம், களக்காட்டை சேர்ந்த திருமலைநம்பி, வார்டர்களான தேங்காபட்டணத்தை சேர்ந்த ஜெகன், சாமியார்மடத்தை சேர்ந்த சிவகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

பரபரப்பு தகவல்கள்

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 12-ந்தேதி இரவு சிறையில் சபரிவர்மனுக்கும், சக கைதிகள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கைதிகள் அவரை தாக்கி உள்ளனர். மேலும் சபரிவர்மனின் கை, கால்களை கட்டிவைத்து சிறை வார்டர்களும், கைதிகளும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த சபரிவர்மனை சிறைக்காவலர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

8 கைதிகள் அதிரடி கைது

இதையடுத்து வார்டர்களுடன் சேர்ந்து சபரிவர்மனை தாக்கிய கைதிகள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரை தாக்கியது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது 21), ராஜாக்கமங்கலம்துறை சுனாமி காலனியை சேர்ந்த சாரதி(19), திற்பரப்பு நகராண்டிவிளை பகுதியை சேர்ந்த ஜெகன்(40), செங்கொடி முதலியார்குட்டிவிளையை சேர்ந்த சரத்(20), நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த வெரியபெருமாள்(36), இரணியல் கீழத்தெருவை சேர்ந்த சேதுராம்(30), கொட்டாரம் பகுதியை சேர்ந்த அஜித்(29) மற்றும் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த அரவிந்த்(27) ஆகிய 8 கைதிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்ததோடு 8 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் சபரிவர்மன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கைது செய்யப்பட்டிருக்கும் வார்டர்கள் மற்றும் கைதிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

சபரிவர்மனின் மரணத்திற்கு நீதி கேட்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுத்தும் வருகிறார்கள். அதனை வலியுறுத்தி வியாபாரி சபரிவர்மனின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர்கள் நேற்று 3-வது நாளாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமானோர் திரண்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் திரண்டனர். இதற்கிடையே கைதான சிறை வார்டர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அன்று லிங்கம்... இன்று சபரிவர்மன்...

கன்னியாகுமரியை சேர்ந்த கபடி வீரர் லிங்கம். தாதாவாக வலம் வந்த அவர், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு 1995-ம் ஆண்டு, ஜூலை 30-ந்தேதி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு, ஏப்ரல் 9-ந்தேதி நள்ளிரவு, சிறையின் சுவர் மீது ஏணி போட்டு ஏறிய 30-க்கும் மேற்பட்ட கும்பல், சிறை வளாகத்திற்குள் குதித்தனர். ஆயுதங்களுடன் புகுந்த அந்த கும்பல் தங்களை தடுக்க முயன்ற சிறை காவலர்களை அரிவாளால் வெட்டியது. பின்னர் ஒரு சிறை அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த லிங்கத்தை சரமாரியாக வெட்டி கொன்றது. சிறைக்குள் அரங்கேறிய இந்த சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு...

அதன்பிறகு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, விசாரணை கைதியாக நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் சிறைக்குள் வைத்து சக கைதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு நாகர்கோவில் சிறையில் நடந்த இந்த சம்பவமும் தமிழகத்தை அதிர வைத்துள்ளது.