தமிழக செய்திகள்

இளம்பெண்ணை கத்தியால் குத்திய வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கயத்தாறு பகுதியில் பக்கத்து வீட்டிற்குள் புகுந்த வியாபாரி, இளம்பெண்ணை கத்தியால் குத்திய பின்பு, தனது வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கிராஜா (வயது 27) மனைவி இசக்கியம்மாள்(26) நேற்று முன்தினம் வீட்டில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோணி வியாபாரி மகாராஜன் (50) என்பவர், திடீரென வீட்டிற்குள் புகுந்து இசக்கியம்மாளைக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், மகாராஜன் அங்கிருந்து தப்பிச் சென்று தனது வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தார். இதனையடுத்து காயமடைந்த 2 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மகாராஜன் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.