தமிழக செய்திகள்

தமிழகத்தின் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்: தடையை நீட்டித்தது சென்னை ஐகோர்ட்டு

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஆக 24 வரை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி (கிழக்கு), மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகள் காலியானதாக சட்டப் பேரவையின் செயலாளர் அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, நெல்லையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், "காலியான தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என்ற நிலையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 151- ஏ-வின் கீழ் காலியானது இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 10-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதனால், இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என 2018- ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக் கூடாது எனவும், நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால், அது வேறுவொரு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சற்று பொறுத்திருந்துப் பார்க்கலாம்." என்று குறிப்பிட்ட நீதிபதிகள் ஜூலை 31-ம் தேதிக்குள் பதில் தர தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர், முதல்-அமைச்சர் விஜய்க்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு, கரூர், விராலி மலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் தடை விதித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, வழக்கு நிலுவை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24ம் தேதி வரை நீட்டித்தது சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.