சென்னை,
இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5, 6-ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2026 சட்டசபை தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்தனர்.
இதையடுத்து இவ்விரு தொகுதிகளும் காலியானதாக சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். காலியான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிட்டது. தற்போது திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவுவதால் இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இத்தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அக்டோபர் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இடைத்தேர்தலை முன்னிட்டு இரு தொகுதிகளிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு மையங்களாக செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். மேலும், குறிப்பிட்ட இவ்விரு தொகுதிகளிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தேர்தல் நடைபெறும் நாளன்று, அதாவது அக்டோபர் 6-ம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.