தமிழக செய்திகள்

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்: முன்னேற்பாடு பணிகளை தொடங்கிய தேர்தல் கமிஷன்

திருச்சி, ஈரோடு, திருப்பூர், நெல்லை மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 பேரும் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.

இதையடுத்து மேற்கண்ட 5 தொகுதிகளும் காலியாகிவிட்டன. இந்த 5 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கிவிட்டது. இதுதொடர்பாக செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு, திருப்பூர், நெல்லை மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 பேரும் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து 5 தொகுதிகளும் காலியாகிவிட்டன. இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவிக்கும். எனவே அதற்கான அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் நடைமுறைகள் தொடங்க தயாராக இருக்க வேண்டி யது அவசியமாகும்.

உங்கள் மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தயார் நிலையில் இருக்கின்றனரா?. இடைத் தேர்தல் நடக்கும் தொகுதியின் ஏதாவது பாகங்கள், வேறு மாவட்டங்களுக்குள்ளும் வருகிறதா? மாநகராட்சிக்குள் தொகுதி வருகிறதா? என்பது பற்றிய விவரங்களை 5 மாவட்ட கலெக்டர்களும் வருகிற 22-ந் தேதிக்குள் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.