சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ந்தேதி நடைபெற்ற நிலையில், விஜய் தலைமையிலான த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை (118) கிடைக்காததால், காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு வாக்களித்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் எஸ்.ஜெயகுமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பி.சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு (மே 10), பெருந்துறை (மே 25), மதுராந்தகம் (மே 25), தாராபுரம் (மே 25), அம்பாசமுத்திரம் (மே 26) ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அதில் இருந்து 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும்.
அந்த வகையில், விரைவில் மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை வரும் 22-ந்தேதிக்குள் செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளான, மாவட்ட கலெக்டர்களை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும், உதவி அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.