தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: 16-ந் தேதி நடக்கிறது

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் வரும் 16-ந் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்

தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 22-ந் தேதி வரை துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமைச்சரவை கூட்டம்

பட்ஜெட்டில் த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் வரும் 16-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது.

இந்த அமைச்சரவை கூட்டம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.