தமிழக செய்திகள்

ஜனநாயகன் படத்தை ஒளிபரப்பிய கேபிள் சேனலுக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை

உள்ளூர் கேபிள் டி.வி.யில் ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட்ட தனியார் சேனல். நிறுவனரை போலீசார் கைது செய்ததுடன், அந்த அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராம்நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 44). இவர் அந்தப்பகுதியில் "ராசி பிரைம் மூவி" என்ற பெயரில் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார். அத்துடன் அந்த கேபிள் டி.வியில் ராசி டி.வி. என்ற பெயரில் உள்ளூர் சேனலையும் அவர் நடத்தி வருகிறார். இந்த சேனல் கேபிள் டி.வி. மூலம் பொதுமக்களுக்கு சென்றடைந்து வருகிறது. இதில் பொழுதுபோக்கு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்து மத்திய தணிக்கை சான்று பெறாமல் நிலுவையில் இருந்து வரும் ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படத்தை கடந்த 11-ம் தேதி கேபிள் டி.வி. மூலம் இந்த சேனலில் ஒளிபரப்பு செய்ததாக தெரிகிறது. அதை பார்த்த விஜய் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே கேபிள் டி.வி.யில் உள்ளூர் சேனலில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானது அந்தப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது. இது குறித்து தமிழக வெற்றிக்கழக கோவை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மோகனபிரியா கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கரிக்கோல் பாரி சங்கர் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அதில், கேபிள் டி.வி. நடத்தி வரும் பழனிசாமி (வயது 44) என்பவர்தான் ஜனநாயகன் திரைப்படத்தை உள்ளூர் சேனலில் ஒளிபரப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அத்துடன், மத்திய தணிக்கை குழுவால் அனுமதி அளிக்காத திரைப்படத்தை வெளியிட்ட அவர் நடத்தி வந்த தனியார் சேனல் நிறுவனத்தையும் போலீசார் பூட்டி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து அவர் எந்த அடிப்படையில் திரைக்கு வராத ஜனநாயகன் திரைப்படத்தை உள்ளூர் சேனலில் ஒளிபரப்பு செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.