புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் கடலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தனிநபர் ஒருவர் 4½ லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி, வல்லரசு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது. இதையடுத்து, புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் அளவுக்கு மதுபானம் கொண்டு வர சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது.
இதையடுத்து, இந்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா நேற்று முறையீட்டார். அப்போது அவர், நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்க அனுமதியளிக்கும் அரசாணை, புதுச்சேரி மாநில மதுபானத்துக்கு பொருந்தாது. பிற மாநில மதுபானங்கள் மிகக் குறைந்த அளவில் இருந்தாலும், அதனை வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும் என்றார்.இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம். நிர்மல்குமார், இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரிப்பதாக உத்தரவிட்டார்.