தமிழக செய்திகள்

தனிநபர் பயன்பாட்டிற்கு 4.5 லிட்டர் மதுபானம் வைத்துகொள்ளலாமா? சென்னை ஐகோர்ட் விளக்கம்

அரசின் உத்தரவு பிற மாநில மதுபானங்களுக்கு பொருந்தாது என்று சென்னை ஐகோர்ட்டு தெளிவுபடுத்தி தீர்ப்பு அளித்துள்ளது.

புதுச்சேரியில் இருந்து மதுபானம் எடுத்து வந்த வல்லரசு என்பவர் மீதான வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதையயடுத்து, புதுச்சேரியில் இருந்து 4½ லிட்டர் மதுபானங்களை தமிழ்நாட்டிற்குள் எடுத்து வரலாம் என்ற சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம். நிர்மல்குமாரிடம், மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா முறையிட்டார்.இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து 3.4 லிட்டர் மதுபானத்தை விற்பனைக்காக கொண்டு வந்ததாக தமிழரசன், ராஜேஷ்குமார் ஆகியோர் மீது கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இவர்கள் தாக்கல் செய்த மனு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அரசாணை அனுமதிஅப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ். சிலம்புச்செல்வன், "4½ லிட்டர் மதுபானங்களை தனி நபர் வைத்துக்கொள்ள அரசாணை அனுமதிக்கும்போது, வெறும் 3.4 லிட்டர் மதுபானம் வைத்திருந்ததற்காக மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, "4½ லிட்டர் மதுபானம் தமிழ்நாட்டில் விற்பனை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரும் மதுபானத்துக்கு இது பொருந்தாது" என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம். நிர்மல் குமார், "தனி நபர் பயன்பாட்டுக்கு 4½ லிட்டர் மதுபானம் வைத்துக்கொள்ளலாம் என்ற அரசாணை என்பது தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும். பிற மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரும் மதுபானங்களுக்கு பொருந்தாது" என்று விளக்கம் அளித்து தீர்ப்பு அளித்துள்ளார்