சென்னை,
புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 'சொத்துப் பத்திரப்பதிவின்போது நிலத்தின் நான்கு புற எல்லைகளை குறிப்பிடாமல், 'கூகுள் மேப்' அல்லது 'ஜி.பி.எஸ்.' விவரங்களை மட்டும் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யலாமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், நான்கு புற எல்லைகளை குறிப்பிடுவது தொடர்பான பதிவு விதிகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் நகல்களையும் கேட்டிருந்தார். அதோடு, பதிவுத்துறையின் 'ஸ்டார் 3.0' திட்டத்தில் ஜி.ஐ.எஸ். வரைபடம் நான்கு புற எல்லைகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுமா அல்லது கூடுதல் ஆவணமாக இணைக்கப்படுமா என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு பதிவுத்துறை அளித்த பதிலில், 'கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் நகல் வழங்கப்பட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையின்படி, பத்திரப்பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் புவியியல் ஆயத்தொலைவுகளுடன் நிலம் அமைந்துள்ள இடத்தை காட்டும் அட்சரேகை, தீர்க்கரேகை எண்கள் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.
அந்த புகைப்படத்தை ஏ4 தாளில் அச்சிட்டு, ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைத்து, பக்க எண்ணை குறிப்பிட வேண்டும். புகைப்படத்தில் ஆவணம் எழுதுபவர் மற்றும் எழுதி வாங்குபவர் கையொப்பமிட வேண்டும். இந்த நடைமுறை 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கேள்விகளுக்கு தேவையான தகவல்கள் பதிவுத்துறையின் பதிவேடுகளில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி வரை, நான்கு புற எல்லைகள் சரியாகக் குறிப்பிடப்படாமல் அல்லது 'கூகுள் மேப்' பயன்ப டுத்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் கேட்கப்பட்டிருந்தன. ஆனால், நான்கு புற எல் லைகளுக்குப் பதிலாகக் கூகுள் மேப் அல்லது ஜி.பி.எஸ். விவரங்களை மட்டும் பயன்படுத்திப் பத்திரப்பதிவு செய்ய லாமா என்பது குறித்து பதிவுத்துறை நேரடியான பதில் அளிக்கவில்லை.