சென்னை,
ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிகள் தூங்குவதற்கான நேரக் கட்டுப்பாட்டை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. அதே சமயம், சிறப்புப் பிரிவினருக்கான விதிவிலக்குகளை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், "உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியுடன் ரெயிலில் பயணித்தபோது, பகல் நேரத்தில் கீழ் படுக்கை வசதி மறுக்கப்பட்டது. எனவே, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் உறங்க வேண்டும் என்ற ரெயில்வே வாரியத்தின் 2017-ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரெயில்வே வாரியத்தின் பொதுவான உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். மேலும், ரெயில்வே விதிகளிலேயே நோயாளிகளுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி வழக்கை முடித்து வைத்தனர்.
ரெயில்வே விதிகளின்படி பொதுவான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும், சில சிறப்புப் பிரிவினருக்கு முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் / நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஆகியோர் பகல் நேரத்திலும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி, எந்த நேரத்திலும் படுக்கையைப் பயன்படுத்தி உறங்கலாம் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் சுட்டிக்காட்டினர்.
இந்திய ரெயில்வே அமைச்சகம் (புது டெல்லி) கடந்த 2017 செப்டம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ரெயில்களில் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுக்கைகளை விரித்து உறங்க அனுமதிக்கப்படுவர். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான பகல் நேரத்தில், நடுத்தர படுக்கையை மடக்கி வைத்துவிட்டு, கீழ் படுக்கையில் மற்ற பயணிகளும் அமர்ந்து பயணிக்க இடம் தர வேண்டும் என்பது பொதுவான விதியாகும்.