தமிழக செய்திகள்

உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்ய முடிவா..? - அன்புமணி கேள்வி

இளைஞர்களின் 13 ஆண்டு கனவை தி.மு.க. அரசு சிதைத்து விடக்கூடாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு திசம்பர் 27-ஆம் நாள் நடத்தப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இதனால், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் நியமனம் ரத்து செய்யப்படலாம் என்று வெளியாகியுள்ள செய்திகள் தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன.

அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக வெளியிடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் தொடங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள் கடந்த திசம்பர் 27-ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது.

தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான உத்தேச விடைக்குறிப்புகளை ஜனவரி 5-ஆம் தேதி வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், அவற்றின் மீதான ஆட்சேபனைகளை ஜனவரி 13-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தது.

வழக்கமாக விடைக்குறிப்புக்கான ஆட்சேபனைகள் பெறப்பட்ட ஒரு வாரத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை ஜனவரி 13-ஆம் தேதி ஆட்சேபனைகள் பெறப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இன்று வரை போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எந்த நேரமும் அறிவிக்கப்படும் சூழல் உள்ள நிலையில், ஆள்தேர்வுக்கான முடிவுகள், வழக்கமாக வெளியிடப்படுவதை விட விரைவாக வெளியிடப்பட வேண்டும். ஆனால், அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகள் மட்டும் தாமதம் செய்யப்படுகிறது.

தாமதத்திற்கான காரணம் குறித்து விசாரித்த போது, தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், உதவிப் பேராசிரியர்களை உடனடியாக தேர்வு செய்து நியமன ஆணைகளை வழங்கினால் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியிருக்கும். அதற்கு அரசிடம் பணம் இல்லை என்பதால் தான் போட்டித் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் தெரியவருகிறது. இது உண்மையாக இருந்தால், இந்தத் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருப்போரின் சாபம் திமுகவை சும்மா விடாது.

மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையையும், கோடைக்கால முன்பணமும் சேர்த்து ஒருவருக்கு ரூ.5,000 வீதம் ரூ.6550 கோடியை முன்கூட்டியே ஒரே நாளில் வழங்க முடிந்த திமுக அரசு, ஒரு மாதத்திற்கு ரூ.20 கோடி ஊதியம் வழங்க நிதி இல்லை என்று கூறி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்ய முயல்வது மிகக் கொடிய சமூக அநீதி ஆகும். இதை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 11 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணி இடங்கள் உள்ளன. அவற்றில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களையெல்லாம் நிரப்பாமல் கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு சமாளித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதல் கட்டமாக 4000 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு இரு ஆண்டுகள் ஆகியும் அதற்கான அறிவிப்பைக் கூட திமுக அரசு வெளியிடவில்லை.

அதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டிய பிறகு 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பம் செய்தவர்களுக்கு 04.08.2024 ஆம் நாள் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக 2024-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் நாள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்பின் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உதவிப் பேராசிரியர் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை.

ஒருவழியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக 2,708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இப்போதும் அதுவும் ரத்து செய்யப்படும் என்றால் அது தமிழ்நாட்டு மக்களையும், உதவிப் பேராசிரியர் பணிக்காக கடந்த 13 ஆண்டுகளாக காத்திருப்பவர்களையும் முட்டாள்களாக்கும் செயலாகும்.

2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக 35 புதிய கலைக்கல்லூரிகளைத் திறந்தது. அவற்றில் 420 புதிய உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் அறிவித்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் ஒரே ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட திமுக அரசு நியமிக்கவே இல்லை. மருத்துவர்களையே நியமிக்காமல் மருத்துவமனைகளை திறந்தும், பேராசிரியர்களையே நியமிக்காமல் கல்லூரிகளைத் திறந்தும் சாதனை படைத்த ஒரே அரசு உலகிலேயே திமுக அரசு மட்டும் தான். பணத்தைக் கொண்டு விளம்பரங்களைச் செய்வதன் மூலம் தங்களின் தோல்விகளையும், துரோகங்களையும் மறைக்க நினைக்கிறது திமுக அரசு.

அரசு கல்லூரிகளுக்கு நீண்ட காலமாக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால், அப்பணிக்காக காத்திருக்கும் இளைய சமுதாயத்தினர் கடுமையான ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் ஒருமுறை உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டால், அந்தப் பணிக்காக காத்திருப்பவர்கள் அதில் சேருவதற்கான வயது வரம்பை கடந்து விடுவார்கள். அது அவர்களின் கனவை சிதைத்து விடும். எனவே, அத்தகைய நிலையை ஏற்படுத்தி விடாமல் 2708 உதவிப் பேராசிரியர் பணிக்காக போட்டித்தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட்டு, தகுதியானவர்களை நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.