தமிழக செய்திகள்

முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்க முடியுமா? - அரசியல் திருப்பங்களால் நிலவும் பரபரப்பு

நிபந்தனையோடு தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதனையடுத்து தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து. விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற் றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார். ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையே, விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாததால், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாக ஒரு தகவல் நேற்று இரவு காட்டுத்தீ போல் பரவியது. இதற்கு ஏற்றார்போல் இரு கட்சிகளும் தனித்தனியாக நேற்று பல மணி நேரம் ஆலோசனை நடத்தின. இந்த தகவலுக்கு 2 கட்சிகளும் மறுப்பு தெரிவிக்காததால், இந்த தகவல் உண்மை என்றே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழக அரசியல் களம் கடந்த 2 நாட்களாக ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாகவே இருந்து வருகிறது.

அதன் விவரம் வருமாறு:-

* த.வெ.க.விற்கு, காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தரும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் ஆட்சியில் பங்கு என்பதோடு மட்டுமல்லாமல் இனி நடைபெற உள்ள உள்ளாட்சி, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை தேர்தலில்களிலும் காங்கிரசுடன் த.வெ.க. கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு காங்கிரஸ் ஆதரவு தந்தது.

* பா.ம.க. த.வெ.கவோடு சேர்ந்துவிடும். அந்த அமைச்சரவையில் சவுமியா அன்புமணி சேர்ந்து விடுவார் என்றும் கூறப்பட் டது. ஆனால் நேற்று திடீரென்று அன்புமணி ராமதாஸ் எந்த கருத்தையும் இது தொடர்பாக சொல்ல மறுத்து விட்டார். அதாவது பா.ம.க. த.வெ.க.வுடன் சேர கூடாது. அதற்கு ஈடாக அன்புமணி ராமதாசுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்ற பேரம் பேசப்பட்டதால் பா.ம.க. இப்போது த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பான தகவல் கிளம்பியது.

* த.வெ.க.விற்கு அதரவு கொடுப்பது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டு அதில் முடிவு எடுக்கப்படும் என்று நேற்று காலை திருமாவளவன் கூறியிருந்த நிலையில், இந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாலையில் அறிவிப்பு வெளியாது. ஆனால் ஏன் ரத்து என்பதற்கான காரணம் தெரிவிக்கப்பட வில்லை. அதன் மூலம் த.வெ.க.விற்கு வி.சி.க.ஆதரவு தராது என்றே கூறப்படுகிறது.

* ஆரம்பத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் த.வெ.க. பக்கம் செல்வதாக கூறப்பட்ட நிலையில் அவர்களும் தி.மு.க.வை விட்டு செல்ல வேண்டாம். தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டும் என்ற முடிவை எடுத்து இருப்பதாக தெரிகிறது.

* விஜய் 7-ந் தேதி (அதாவது இன்று) முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே அதற்கான ஏற் பாடுகளை த.வெ.க.வினர் செய்ய தொடங்கினர். ஆனால் அதற்கு முன்பு எப்போதும் வழக்கத்தில் இல்லாத ஒன்றாக, கவர்னர் தொலைபேசியில் பத்திரிகை ஒன்றுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென பேட்டி அளித்தார்.

அதில் த.வெ.க.விற்கு எவ்வளவு எம்.எல்.ஏ.கள் ஆதரவு இருக்கிறது என்ற தகவல் எனக்கு இன்னும் வரவில்லை. அது வந்த பிறகு நான் முடிவெடுப்பேன் என்று தெளிவான ஒரு செய்தியை அழுத்தமாக சொன்னார். அதாவது முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்க வேண்டுமென்றால், நான் (கவர்னர்) முடிவு செய்ய வேண்டும். த.வெ.க.வினர் அல்ல. என்பதனை கவர்னர் தெளிவுப்படுத்தவே பேட்டி அளித்து இருக்கிறார். அதன் வெளிப்படாக தான் அவர், விஜய்யை ஆட்சி அமைக்க அனுமதிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

* த.வெ.க.விற்கு ஆதரவு தரும் என்று நம்பப்பட்ட வி.சி.க.. கம்யூனிஸ்டு கட்சிகள், பா.ம.க. ஆகியவை நேற்று பின் வாங்கி இருக்கின்றன. அ.தி.மு.க. ஆதரவு தரமாட்டோம் என்று திட்டவிட்டமாக கூறிவிட்டது. எனவே விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது, எனவே கவர்னரும் அவரை ஆட்சி அமைக்க அழைக்கமாட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் கூறுகின்றனர். எனவே தமிழகத்தில் இனி அடுத்து என்ன நடக்கப்போகும் என்ற பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த பரபரப்பான சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னரை சந்திக்க உள்ளார். காலை 11 மணிக்கு கவர்னர் அர்லேகரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவர் பனையூரில் இருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டுள்ளார்.