சென்னை,
முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். இவர் பிரபல ஜோதிடராவார். மேலும் த.வெ.க. கட்சியில் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டிருந்தார்.
ஜோதிடராக இருந்தவருக்கு அரசு பதவியா? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஜோதிடர் எப்படி அரசியல் ஆலோசனைகள் வழங்குவார் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டசபையின் இன்றைய நிகழ்விலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. விசிக, தேமுதிக, மஜக கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. ஆதரவு மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 24 மணி நேரத்துக்குள் நியமன உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். வரும் காலங்களில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக முதல்-அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் அமையும் என்று நம்புகிறேன்.
போகவேண்டிய தூரம் நிறைய உள்ளது. ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைக்கப்பட வேண்டும்.எதிர்க்கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் முதல்-அமைச்சரின் பண்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.