தமிழக செய்திகள்

ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை

சிறப்பு சட்டத்தை இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன்.காந்திமதிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நெல்லையில் கடந்த சில மாதத்துக்கு முன்பு கவின் எனும் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசருக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது. கவினை படுகொலை செய்த சுர்ஜித் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இறந்த கவினை ஏற்கனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மிரட்டியதாக கவினின் தந்தை புகார் அளித்துள்ளார். இருப்பினும் அவர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. இந்த கொலை வழக்கை விசாரிக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சமுதாயத்தை சேர்ந்தவர். எனவே நெல்லை மாவட்ட நீதிபதி கண்காணிப்பின் கீழ் சி.பி.சி.ஐ.டி வழக்கை விசாரிக்கவும், கவினின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும், ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை இயற்றவு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு இது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், வடமலை ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கவின் ஆணவ படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. கீழ் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. கவினின் குடும்பத்திற்கு எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு சட்டத்தை இயற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிறப்பு சட்டத்தை இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.