சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "தமிழறிஞர் மனோன்மணியம் சுந்தரனார் 1891-ம் ஆண்டு எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சி தொடங்கும்போது பாடப்படும். முடிவடையும்போது தேசிய கீதம் பாடப்படும். இந்த நடைமுறையை பல ஆண்டுகளாக மரபாக தமிழகம் கொண்டுள்ளது.
இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக, அரசு நிகழ்ச்சியில் வந்தே மாதரம், தேசியகீதம் முதலில் பாடவேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஜனவரி 28-ந்தேதி சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி கடந்த மே 10-ந்தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடைசியில் பாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழர்களின் உணர்வு, கலாசாரம் மற்றும் அடையாளமாக திகழ்கிறது. பல தலைமுறைகளாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே தொடங்கப்பட்டுள்ளன. எனவே, எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் கலாசார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.பிரபாகரன் ஆஜராகி, "தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் போல கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அந்தந்த மாநில பாடல்கள் பாடப்படுகின்றன. இந்த பாடல்களை எல்லாம் மத்திய அரசு நிகழ்ச்சியில் முதலில் பாட மத்திய அரசு உத்தரவிடுமா? எனவே, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடவேண்டும் என்று உத்தரவிடவேண்டும்" என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், "வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்று இந்த வழக்கு தொடரப்படவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடவேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சியில் எந்த பாடலை முதலில் பாடவேண்டும் என்றெல்லாம் இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது" என்று கூறினர்.
உடனே மனுதாரர் வக்கீல், மத்திய அரசு சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி புதிய வழக்கு தாக்கல் செய்கிறேன். இந்த வழக்கை திரும்ப பெறுகிறேன்” என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்தனர்.