தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ஜீசஸ் (18). இவர் தனது நண்பர்களான சரவணகுமார் (24), அரவிந்த் (18), அஸ்வின் (18) ஆகியோருடன் நேற்று அதிகாலை திருச்செந்தூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த காளிதாஸ் (21) ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
சாந்தி நகர் அருகே கார் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அதிவேகமாகச் சென்று சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் உடனடியாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 6.20 மணியளவில் ஜீசஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநர் காளிதாஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.