தமிழக செய்திகள்

ஆம்னி பேருந்து மீது கார் மோதி கோர விபத்து - 4 பேர் பலி! 3 பேருக்கு திவீர சிகிச்சை

ஆம்னி பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்,

ஆம்னி பேருந்தின் பின்புறம் கார் பயங்கரமாக மோதிய கோர விபத்தில் பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோர விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). சென்னையில் கூலி வேலை செய்து வரும் இவர், தனது தம்பி ரஜினி குமாரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி சூர்யா (வயது 35), நண்பர்கள் பிரபாகரன் (வயது 30), காளீஸ்வரன் (வயது 25), கண்ணதாசன் (வயது 22), ஜான் கென்னடி (வயது 35) மற்றும் சரண்யா (வயது 23) ஆகியோருடன் ராமநாதபுரம் சென்றுள்ளார்.

திருமண விழா முடிந்ததும் 7 பேரும் காரில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டனர். காரை கண்ணதாசன் ஓட்டிச் சென்றுள்ளார். நேற்று இரவு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்தனர்.

அப்போது, முன்னால் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறம் கார் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

4 பேர் பலி

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த பிரபாகரன் மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் காவல்துறை மற்றும் மீட்புப் பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காரில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர். அவர்கள் பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவி சூர்யா ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த கண்ணதாசன், ஜான் கென்னடி மற்றும் சரண்யா ஆகிய 3 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதற்கிடையே, விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 34 பயணிகளும் மாற்றுப் பேருந்து மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

இந்த விபத்து குறித்து பெரம்பலூர் டவுன் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் ராஜசீலன் (45) என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

SCROLL FOR NEXT