தமிழக செய்திகள்

வரத்து குறைவால் கேரட் விலை அதிகரிப்பு: அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்

நீலகிரியில் விளையும் கேரட்டுக்கு தனி மவுசு உள்ளது.

நீலகிரி,

கேரட் சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் சாகுபடியில் அதிக அளவிலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 3,500 முதல் 4,000 எக்டேர் பரப்பளவு வரை கேரட் பயிரிடப்படுகிறது. நீலகிரியில் விளையும் கேரட், அதன் சுவை மற்றும் தரத்திற்காக தனி மவுசு உள்ளது.

பருவம் மற்றும் சந்தை தேவையைப் பொறுத்து, நீலகிரியில் இருந்து தினமும் சராசரியாக 100 முதல் 200 டன் கேரட் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இங்கு விளையும் மலைக்காய்கறிகள் சென்னை, மதுரை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஆண்டுதோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

விலை உயர்வு

வழக்கமாக கேரட்டுக்கு நிலையில்லா விலை இருந்தாலும், அறுவடை நாட்களுக்குள் அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தநிலையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன், ஜூலையில் மலைக்காய்கறிகளின் விலையில் சரிவு ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டு பருவமழை காலதாமதமானதால், வரத்து குறைந்து மலைக்காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. குறிப்பாக கேரட் விலை கடந்த மாதத்தை விட இருமடங்கு அதிகரித்துள்ளது.

நீலகிரியில் ஒரு கிலோ கேரட் ரூ.23-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.50 முதல் ரூ.60-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கேரட் விலை உயர்ந்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரட் மட்டுமல்லாமல் பீட்ரூட் உள்பட மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கேரட் அறுவடை பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.