தமிழக செய்திகள்

ரெயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை: ரெயில்வே போலீசார் எச்சரிக்கை

ரெயில்கள் மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் பயணிகள் பட்டாசுகளை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சென்னை,

ரெயிலில் பட்டாசு எடுத்துச் செல்பவர்கள் மீது ரெயில்வே சட்டத்தின் கீழ் ரூ.1,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படலாம்.

நவம்பர் 8-ந்தேதி தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு ரெயில்களில் மட்டுமே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ரெயில் அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரெயிலில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது என ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம்

பட்டாசுகளில் உள்ள ரசாயன கலவைகளால் சிறிய தீப்பொறி ஏற்பட்டால் கூட அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். பொதுவாக ரெயில்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு போன்றவற்றை எடுத்துச்செல்லக்கூடாது. இவ்வாறு எடுத்துச் செல்வோர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்யும் பணியிலும் விரைவில் ஈடுபட உள்ளோம். ரெயில்கள் மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் பயணிகள் பட்டாசுகளை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ.1,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை

மீறி எடுத்துச் சென்றால் ரெயில்வே சட்டத்தின் கீழ் ரூ.1,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படலாம். தடையை மீறி யாராவது ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்றாலோ, சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் தென்பட்டாலோ 139 என்ற ரெயில்வே உதவி எண்ணிலும், அருகில் உள்ள ரெயில்வே போலீசாரிடமும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு கூறினார்கள்.

SCROLL FOR NEXT