திருப்பூர்,
தமிழகத்தில் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கிராப்ட் காகித விலை கடந்த இரு மாதங்களில் 8 முறை உயர்த்தப்பட்டு, டன் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரம் அதிகரித்துள்ளது. முன்னறிவிப்பின்றி விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரிச் சுமையால் அட்டைப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2 ஆயிரத்து 500 நிறுவனங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கோவை மண்டலத்தின் 400 நிறுவனங்கள் உள்பட மாநிலம் முழுவதும் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் ஒரு நாளில் ரூ.25 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மண்டல தலைவர் தண்டபாணி கூறுகையில், காகிதத்தை முழு பணம் கொடுத்து வாங்கிவிட்டு, அட்டைப்பெட்டிகளை 30 நாட்கள் கடனுக்கு விற்கும் சூழல் உள்ளதால் தொழில் அபாயத்தில் உள்ளது என்றார். தமிழக தொழில் துறை அமைச்சர் தலையிட்டு காகித விலையை சீராக்க வேண்டும், ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து காகிதத்தை இறக்குமதி செய்து சீரான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.