புதுடெல்லி,
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதற்கிடையில், கட்சி மாறிய இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் செல்வகுமார் என்பவர் கடந்த ஜூன் மாதம் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்திருப்பதாகக் கூறி, நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் இவர்கள் நால்வர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் மூல மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.