சென்னை,
அ.தி.மு.க. கடந்த 2022-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என்று இரண்டாக பிரிந்தது. இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தை நடத்த தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதன்படி ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வைத்தியலிங்கம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேறியது. இதை எதிர்த்து 4 பேரும் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில், ஜே.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்து சபாநாயகராகி விட்டார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்து விட்டனர்.
இதையடுத்து தாங்கள் தொடர்ந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் கடிதம் கொடுத்துள்ளனர்.
இவர்களது வழக்குகள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், இவர்கள் கொடுத்த கடிதம் ஐகோர்ட்டு பதிவுத்துறையில் இருந்து கோர்ட்டு அறைக்கு வரவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.