தமிழக செய்திகள்

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கு - தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

தமிழக அரசு இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் மட்டுமே பெற்று வருவதாக தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை,

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக வங்கக்கடலில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் ஒப்புதல் வந்து வழங்கி இருந்தது. இந்த ஒப்புதலை எதிர்த்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன், சென்னையை சேர்ந்த மீனவர் பாரதி, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு 2022 ஆம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தும் தமிழக அரசு இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் மட்டுமே பெற்று வருவதாக தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது.

மேலும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியையும் தீர்ப்பாயம் எழுப்பியுள்ளது. அதோடு, இந்த பிரதான வழக்கில் வரும் அக்டோபர் 29-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பசுமை தீர்ப்பாயம், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 29-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

SCROLL FOR NEXT