சென்னை,
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதை எதிர்த்து அ.தி.மு.க. கொறடாஅ அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்து மதுரையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஒரே காரணத்துக்காக ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன? ஏற்கனவே சம்பந்தப்பட்ட கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர்கள் வாதம் துவங்கியுள்ளது. ஒரு பிரச்சனைக்கு ஒரு வழக்கு போதும். நிலுவையில் இருக்கக்கூடிய வழக்கை நீர்த்துப் போக செய்யக்கூடிய வகையில ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன?” என்று கேள்வி எழுப்பினர்.
அது மட்டுமின்றி, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.