தமிழக முதல் அமைச்சரும் தவெக தலைவருமான விஜய், சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விஜய் தனது வேட்பு மனுவில் சொத்துகளை மறைத்துள்ளதாகவும், தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டி அத்தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளரான ஆர்.டி.சேகர் ஆகியோர் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்தனர்.இந்த வழக்கை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்து வந்தார்.
இதற்கிடையே, தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றும், தனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதால் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
வாக்காளர் தினேஷ் தரப்பில், விஜய் தனது வேட்புமனுவில், பண்ருட்டியில் வாங்கியிருந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும், தகவல்களை மறைத்தது, வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனில் தேவையில்லாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தர்ப்பு வாத்ங்களும் கடந்த வாரம் முடிந்த நிலையில், எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யபட்டது. இதையடுத்து, தன் மீதான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஜோசப் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.