சென்னை,
பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை நிராகரிக்கக்கோரி முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது, விஜய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள், சட்ட ஆணைய பரிந்துரைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.
மேலும், வேட்புமனுவில் முதல்-அமைச்சர் விஜய் தனது சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என தேர்தல் வழக்குகளின் மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் வாதிடப்பட்டது. விஜய் தரப்பு வாதம் முடிவடையாததால். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
நேற்றைய விசாரணையின்போது வாக்காளர் தினேஷ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, “வேட்பு மனுவில் தவறான தகவலை அளிக்கவோ அல்லது தகவலை மறைக்கவோ கூடாது. ஆனால் முதல்-அமைச்சர் விஜய் தாக்கல் செய்த வேட்மனுவில் பன்ரூட்டியில் உள்ள 30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.
அந்த சொத்தின் சர்வே நம்பர், விற்பனை பத்திரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் வழக்கை பொதுவான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தாக்கல் செய்யவில்லை. அனைத்து ஆதாரங்களோடும்தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என மனுதாரர் தினேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “சொத்துகளை குறைத்து காட்டியதற்காக தேர்தல் செல்லாது என்று அறிவிக்க முடியுமா? ஒரு உச்ச நட்சத்திரமான முதல்-அமைச்சர் விஜய் 600 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். அதில் 30 கோடி ரூபாய் சொத்தை கணக்கில் காட்டவில்லை என்பது அவருடைய தேர்தல் வெற்றியை எப்படி பாதிக்கும்.
கோடீஸ்வரர்களிடம் எங்கெல்லாம் சொத்து இருக்கிறது என்று கேட்டால் அவர்களுக்கு எப்படி தெரியும்? ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு விஜய் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில், “வேட்பு மனுக்களில் குற்ற வழக்குகளை மறைப்பது போல் சொத்து விவரங்களை மறைப்பது விதிமீறல் மட்டுமல்ல, அது ஊழல் நடவடிக்கை” என்று வாதிடப்பட்டது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், வழக்கை நிராகரிக்க கோரி முதல்-அமைச்சர் விஜய் தாக்கல் செய்த மனு மீது வரும் அக்டோபர் 14-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.